நட்பின் வலி
நட்பின் வலி
இன்று என் இதயத்தில் இடிமுழக்கம்
விழிகளில் அடைமழை
மூளையின் வானிலை அறிக்கையில்
இன்னும் சில நாட்கள் அசாதாரண சூழ்நிலை தொடர்வதாக எச்சரிக்கை....
இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே
மனதில் தாழமுக்கம் உருவாவதை உள்ளமும் உறுதிப்படுத்தியது
தற்காத்து கொள்வதற்குள் காலநிலை கைமீறி போய்விட்டது....
காதலை விட கண்ணியமாக கருதிய நட்பின் பிரிவுதான்
என் காலநிலை மாற்றத்திற்கும் காரணமென
என் உளச்சரிதவியில் அமைப்பு கூறியது..
உன்னை அவதூறு பேசியவர்களின் முன் சாதாரண நடத்தையும்
காரணம் வினவிய என்னிடம் அசாதாரண நடத்தையும்
எனது சீரற்ற மன நிலையை சீற்றமடைய வைத்தது..
எல்லோரும் என்னை வஞ்சித்த போதும்
மப்பு மந்தாரமாகவே என் வானிலை தொடர்ந்தது
நீயும் என்னை ஒதுக்கிய போது ஓகி புயலாக என் உள்ளம் சூறையாடப்பட்டது..
என் இழப்பீடுகளை உன்னால் ஈடுகட்ட இயலாது
நிர்க்கதியாய் நிற்கும் என்னிடம் உனது நிவாரணங்களையாவது தரலாம்
அதற்கும் மணமில்லை எனில் பிரச்சனையும் இல்லை
காலமருந்து என்னை கரைஒதுக்கும் சந்தர்ப்பத்தில்
கணக்கெடுக்க முடியாத உடமைகளில் உனது நினைவுகளும் கலந்திருக்கும்........
"என் தூவானத்தின் அணர்த்தம் இது"
Post a Comment