தமிழரின் அறிவுப்புதையல் தீயில்....யாழ் நூலகம் எரிப்பு நினைவுள்ளதா?
தமிழரின் அறிவுப்புதையல் தீயில்
யாழ் நூலகம் எரிப்பு நினைவுள்ளதா?
தமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கிரையாக்கி 37 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன....
யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது.
இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலக்கட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பிதா கலாநிதி டேவிட் அவர்கள் மன அதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.
இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர்.
நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.
1981 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு அழிப்பின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டடத்தை முன்னிருந்த கட்டடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது.
இப்பணிக்கு முழுநேர பொறியியலராக நியமிக்கப்பட்டவர் பொறியியலாளர் திரு ந. நடேசன் ஆவார். அக்கட்டடத்தின் கட்டடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா ஆவார்.1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டட வேலைகள் முடிந்தன.
குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டடமும் பாரிய சேதத்துக்குள்ளாகின.
பதின்நான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து. முன்பிருந்த கட்டடம் போல அமைக்க இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர்.
யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.
யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
"தூவானத்தின் அழியா வரலாறு"
Post a Comment