மட்டுமண்ணும் நுன்கடன் தொல்லையும்
மட்டுமண்ணும் நுன்கடன் தொல்லையும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 53 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன எனவும், கடன் சுமையினாலே அதிக தற்கொலைகள் இடம்பெறுகின்றன எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஆரம்பம் முதல், நேற்று வரையிலான காலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிட்ட அவர், நுண்கடன், வறுமை, போதைப்பொருள் பாவனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரே, மரணம் எனும் தவறான முடிவை எடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சமய, சமூகத் தலைமைகள், அரசியல் தலைமைகள் ஆகியன முன்வந்து, இம்மக்களுக்கு வாழ்வாதார வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம், நுன்கடன் திட்டத்திலிருந்து இம்மக்களைப் பாதுகாத்து, தற்கொலை முயற்சியிலிருந்து தடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
அதேபோன்று குடும்பப் பிணக்குகளும் இளவயதுத் திருமணங்களும் பாலியல் தொல்லைகளும் இவ்வாறான தற்கொலைகளுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன. உயிரை மாய்த்துக் கொள்வது, ஒருபோதும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது. எனவே, இதில் அனைவருக்கும் பொறுப்பு இருக்கின்றது. இதைக் கவனிக்க வேண்டும் எனவும், இந்த தற்கொலை மரணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூளை, களுவன்கேணி, சித்தாண்டி ஆயித்தியமலை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறான தற்கொலை மரணங்கள் அதிகம் இடம் பெறுவதாகவும் திடீர் மரண விசாரணை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எனவே எங்கள் பிரதேசத்திற்கு நுண்கடன் தேவையா? இப்படியான இழப்புக்கள் தேவையா? என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம். நுண்கடன் திட்டத்தை எமது கிராமத்தில், பிரதேசத்தில் இருந்து முற்றாக ஒழித்து பெறுமதியான உயிர்களைக் காப்போம், முயன்றால் முடியாதது எதுவுமில்லை, நுண்கடன் பிரச்சனைகளால் அழிந்து வரும் இளம் சமூகம்.
தயவு செய்து இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து விலகி கொள்ளுங்கள். முன்னொரு காலங்களில் இவ்வாறான நுண்கடன் வசதிகள் இல்லாத போது மக்கள் வாழவில்லையா?, நாளுக்கு நாள் புது புது நிறுவனங்கள் உருவாகிக் கொண்டு நுண்கடன் என்ற பெயரில் மக்களின் மீது சுமைகளை திணித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மாத கடன் வசதி இப்போது நாள் கடன் வசதி என்று நாளுக்கு நாள் கடன் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது கடன் என்பது வாழ்வாதாரத்தை உயர்த்த பயன்படுத்துங்கள். இல்லையேல் அந்த கடன் எண்ணத்தை விட்டுவிடுங்கள்.
சுயதொழிலுக்கென கடனை பெற்று யாருமே சுயதொழில் செய்வது கிடையாது. இதுதான் இன்றைய நிலமை. கடன் வழங்க வரும் நிறுவனங்களை தங்களது பிரதேசங்களுக்கு வருவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
கடனால் உங்கள் வாழ்வாதாரம் உயறுமாயின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் இன்றைய நிலைமையில் இதை காண்பது அரிது. அதனால் இந்த விடயத்தில் சிந்தித்து செயற்படுங்கள்
நுண்கடன்கள் ஏழைகளின் குரல்வளையை நெரிக்கின்ற கருவிகளாக செயற்படுவதை இன்னமும் அனுமதிக்க முடியாது. குடும்பம் பிரிவது முதல் தற்கொலை வரை சொல்லொணா துயரங்கள் தொடர்கின்றன.
அவரவர் கொள்ளவிற்கு ஏற்ப நுண்கடன் வழங்க வேண்டும். கடன்பெற்றவர்கள் திரும்பச் செலுத்தக் கூடியவர்களா என்பதை பரிசீலனை செய்த பின்பே கடன் வழங்க வேண்டும்.
ஒருநாள் கடன் ஒருவாரக்கடன் ஒருமாதக் கடன் என பலவகையான நுண்கடன்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றது. இதனை ஒருசீரான நிலைக்குக் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை நுண்கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தினால் தனது உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
கடந்த வருடங்களை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் 2018ம் ஆண்டு முதலாம் திகதி தொடக்கம் கடந்த ஐந்து மாதங்களில் 53 தற்கொலை மரணச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் 2016ம் ஆண்டு 97 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன், 2017ம் ஆண்டு கடந்த வருடம் 116 தற்கொலை மரணங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த இரண்டு வருடங்களையும் விட இந்த ஆண்டு ஐந்து மாதத்திலேயே 53 தற்கொலைகள் இடம் பெற்றுள்ளன.
நுண் கடனைப் பெறுபவர்கள் இறுதியில் அதனை மீள செலுத்த முடியாததால் தற்கொலைக்கு செல்கின்றனர். ஒரு தேவை கருதி நுண்கடனைப் பெற்றுக் கொள்ளும் போது கடனாளி கடனைச் சரியான விதத்தில் கட்ட முடியாத கஷ்டமாக நிலைமை உருவாகின்றது. இதனால் பிள்ளைகளின் கல்வி நிலையானது முதலில் பாதிக்கப்படுகின்றது.
சிறுகடன்களை வழங்கிவிட்டு முகவர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கடன்தொகையை அறவிடும் போது கடனாளி கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் பாலியல் ரீதியாக லஞ்சம் கோரும் விடயங்களில் ஈடுபடுகின்றனர்.
கடனை வழங்கி விட்டு அதனைப் பெறுவதற்காக வாராந்தம் அவர்களின் வீடு தேடிச் செல்லும் அதிகாரிகள் பயனாளி கடனை செலுத்த குறித்த வாரம் தவறினால் அதற்கு இந்த அதிகாரிகள் தேவையற்ற விதத்தில் கதைப்பதும் அவர்களின் உள்ளங்களை காயப்படுத்தும் வகையில் கதைப்பதாகவும், இதனாலேயே தற்கொலைக்கே செல்கின்றனர் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூர்த்தி வங்கியில் பல மில்லியன் ரூபாய் பணம் உள்ளது. இந்த பணத்தினை வைத்துக் கொண்டு வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். அத்தோடு மக்களுக்கு கடனான சிறிய வட்டி அடிப்படையில் வழங்க முன்வரலாம்.
ஆனால் இந்த விடயத்தில் உரிய அதிகாரிகள் மக்கள் நலனின் அக்கறை கொள்வது குறைவாகவே இருக்கின்றது. அதுபோன்று அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் அக்கறை கொள்வதில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை தலைவிரித்து ஆடுவதற்கும், தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் காணப்படுவதையும் தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரிநிதிகள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த முன் வரவேண்டும்.
மக்களின் நலனின் அக்கறை கொண்டு அப்பாவி மக்களை நுண்கடன் என்ற கொடிய ஒட்டுண்ணியிடம் இருந்து காப்பாற்ற அனைத்து மக்கள் பிரிநிதிகளும் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனை இவர்கள் செய்வார்களா? 53வது தற்கொலைகளுடன் நிறுத்தப்படுமா?
Post a Comment