“வண்ணம் கொண்ட வெண் நிலவே" ....வண்ணங்களும் வரலாறும்


"வண்ணங்களும் வரலாறும்"



“வண்ணம் கொண்ட வெண் நிலவே
வானம் விட்டு வாராயோ”


என்கிற பாடல்  தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. கதாநாயகன் துவண்டு கிடக்கும் நிலையில் வரும் பாடல் இது. இதில் இடையில் வரும் வேறொரு வரியில்

”கண்டு வந்து சொல்வதற்கு

காற்றுக்கு ஞானம் இல்லை!

நீலத்தை பிரித்துவிட்டால்

வானத்தில் ஏதுமில்லை!

தள்ளி தள்ளி நீ இருந்தால்

சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை !

என்று வரும். கவிப்பேரரசு வைரமுத்து இந்த வரிகளுக்கு சொந்தக்காரர். இது கதையில் கதாப்பாத்திரத்தின் நிலையினைக் குறிக்கும் என்றாலும் மேலே குறிப்பிட்ட வரிகளின் நேரடியான அர்த்தம் நமது தலைப்பை சுருக்கமாக விவரிக்கும்.  ஆம் வண்ணங்கள் இல்லையேல் நம்மால் ஏதும் புரிந்துக்கொள்ளக்கூட முடியாது. பொருள்களைப் பார்க்க முடியாது, ஒன்றினை அடையாளப்படுத்த முடியாது. உயிரிங்களின் உணர்வுகளைத் தவிர வேறு எதையும் உணர முடியாது.

ஓவியம் என்பது யாதெனில் மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் கற்பணையின் காட்சி வடிவமே ஆகும். அதனை வண்ணங்கள் இல்லாமல் வெளிப்படுத்தல் இயலாது.



வண்ணங்கள் கொண்டு ஓவியம் வரையும் முறை 40,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. அதுவும் முதலில் ஓவியர்கள் வெறும் ஐந்து நிறங்களைக் கொண்டு தான் ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை, சிவப்பு. மஞ்சள், காவி, கருப்பு மற்றும் வெள்ளை. சரி முதல் நிறமிகள் எது எது என்று தெரியுமா? இரும்புச்சத்து அதிகம் கொண்ட மண்ணைக் கொண்டு தான் சிகப்பு வண்ணம் கண்டறியப்பட்டு குகைகளின் கலாச்சாரத்தைப் பற்றிய ஓவியங்களை தீட்டினர். “லபிஸ் லசுலி” என்ற அறிய வகை கல்லைக் கொண்டுதான் நீல வண்ணத்தினை தீட்டினர்.

ஓவிய உலகுக்கு மஞ்சள் நிறத்தை அறிமுகம் செய்த ஜோசப் மல்லார்டு வில்லியம் டர்னர் மற்றும் வின்சண்ட் வான் கோக், இதனை உபயோகப்படுத்த அவர்கள் செய்த முயற்சி விசித்திரமானது. மாம்பழங்கள் உண்ட மாட்டின் கோமியத்திலிருந்து திரித்து பதப்படுத்தப்படும் வண்ண திரவமே மஞ்சள் நிறமாக அவர்கள் வரைந்த ஓவியத்தில் மிளிர்ந்தது. மஞ்சள் நிறத்தின் ஆதி விசித்திரமானது என்றால், பச்சை நிறத்தை கண்டறிந்தவர்கள் விஷப்பரிட்சையே செய்தனர் எனலாம். மிகவும் விஷத்தன்மை வாய்ந்த அரிதார நஞ்சின் நிறத்தை, ஓவியங்களில் இயற்கை எழில் காட்சிகள் வரைய பயன்படுத்தியதற்கு காரணம், அது இயற்கையின் நிறமான பச்சை நிறத்தில் இருந்தது. மாவீரன் நெப்போலியன் இறந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவரது படுக்கை அறையின் சுவற்றில் இருக்கும் ஓவியத்தில் பச்சை நிறம் நிறைந்திருந்ததால், அந்த திரவக் காற்றை சுவாசித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு சர்ச்சை எழுந்தது.


கிளாட் மோனெட் வளிமண்டலத்தின் வண்ணம் ஊதா என்பதை உணர்ந்து, ஊதாவை, ஓவியத்தில்  உள்ள வளிமண்டலத்தில் தீட்ட அவர் உபயோகித்தது பன்றியின் சிறுநீர்ப்பையில் வண்ணத்தை வைத்து பாதுகாக்கும் முறையைத்தான். இந்த முறை தான் பின் நாளில் வண்ண திரவங்களை சிறிய பேழையில் வைத்து பாதுகாக்கும் முறையாக மாறியது.

"தூவானத்தின் நிறத்தூறல்"

No comments